''மஹிந்த, ரணில் பின்னணியில் செயற்பட்ட பாதாள உலக குழு.." : அரசாங்கம் பரபரப்பு தகவல்


தெற்கில் பாதாள குழுக்கள் செயற்படுவதற்கு ஒவ்வொரு "கோட் பாதர்கள்' இருந்தனர். ஆனால் வடக்கில் போர் இடம்பெற்றதால் பாதாளக்குழுக்கள் செயற்பட "கோட் பாதர்கள்' இருக்கவில்லை என  சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்
முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அனுசரணைகளிலேயே நாட்டில் பாதாள குழுக்கள் வளர்ச்சியடைந்தன.

தெற்கில் பிரேமதாச, ரணில் மற்றும் ராஜபக்ஷக்கள் "கோட் பாதர்களாக 'பாதாள குழுக்ககளை நடத்திச் சென்றனர். ஆனால் வடக்கில் யுத்தம் நிலவியதால் பாதாள குழுக்களின் செயற்பாடுகளுக்கு இடம் கிடைக்கவில்லை.

"கோட் பாதர்'களும் இருக்கவில்லை. எவ்வாறாயினும் தெற்கில் பாதாள குழுக்கள் செயற்படுவதற்கு ஒவ்வொரு "கோட் பாதர்கள்' இருந்தனர்.

அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த பாதாள குழுக்களுடன் தொடர்புபட்டிருந்தனர்.

பாதாள குழுக்களுக்கிடையே மோதல்கள் ஏற்படும் போது அந்தந்த அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் இணைப்பாளர்கள் தலையிட்டு அவர்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளனர்.
அதேபோன்று பாதாள குழுக்களிடையே பிரதேசங்களும் பிரிக்கப்பட்டிருந்தன என்றார்


இதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பாதாள குழுக்களுடன் தொடர்புகளை பேணினார்கள் என்பதற்கான சாட்சிகள் இருப்பில் அது தொடர்பில் பொய்களை கூறிக்கொண்டிருக்காது சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசிடம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஊடகவி யலாளர் சந்திப்பிலேயே அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பி னர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

ராஜபக்ச காலத்திலேயே நாட்டில் இருந்து பாதாள குழுத் தலைவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றனர். ராஜபக்ச காலத்திலேயே பாதாள செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இப்போது உங்களின் அரசாங்கத்தின் கீழேயே பாதாள குழுக்கள் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடுகளை நடத்தி கொலைகளை செய்வது அதிகரித்துள்ளது.
இப்போது பாதாள குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமைக்கு முழுப் பொறுப்பையும் ஜே.வி.பி அரசாங்கமே ஏற்க வேண்டும்.
பழைய அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைகளை துடைத்துக்கொள்வதற்காக உங்களிடம் மக்கள் அரசாங்கத்தை ஒப்படைக்கவில்லை என்றார்.